Tuesday, 14 February 2012

கல்லூரியின் அனுபவ அலைகள் with Shalim
                                                                         தொடர் - 01

எங்களுக்கு கிடைத்த லெக்சர்

எமது கல்லூரியின் இரண்டாவது செமஸ்டர். எங்களது பொறுப்பாசிரியர் மணிவாணன் சேர் எங்களை அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு சென்று செய்திகள், தகவல்கள் திரட்டி வருமாறு பணித்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு  இடங்களுக்குச் செல்ல நானும் நண்பன் காசியும் (காசி சர்வேஸ்வரன்) மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை சந்திக்க முடிவெடுத்தோம். காசி பிரதியமைச்சருடன் தொலைபேசியில் பேசி appointment  எடுத்திருந்தான். காலை 11 மணிக்கு வருமாறு அவர் சொல்லியிருந்தார். நாங்கள் கல்லூரியிலிருந்து வெளியேறவே 11 மணியாகி விட்டது. கையில் Recorder , mic போன்ற உபகரணங்களோடு தயாரானோம். எங்களுடன் தொலைக்காட்சி பிரிவு நண்பர்கள் அர்ஹம், துஷாந்தி ஆகியோரும் கெமரா உட்பட்ட பொருட்கள் சகிதம் வந்தனர். நாரஹேன்பிடியிலிருந்து கொள்ளுப்பிட்டியிலுள்ள மீள்குடியேற்ற அமைச்சை சென்றடைய 12 மணியாகி விட்டது.

நாங்கள் அங்கு சென்று சில நிமிடங்களில் பிரதியமைச்சர் முரளிதரன் பாராளுமன்றம் செல்வதாக கூறி வெளியே சென்று விட்டார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை எவ்வளவு கெஞ்சியும் அவரை சந்திக்க முடியவில்லை. பலத்த எமாற்றத்துடன் வெளியேறினோம்.  இப்பொழுது என் மனக்கண் எதிரே மணி சேரின்  முகம் வந்து சென்றது. தகவல்கள் திரட்டாமல் College  சென்றால் அவ்வளவுதான். இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை. அர்ஹமும் துஷாந்தியும் வேறெங்கோ சென்று விட நானும் காசியும் பகலுணவை சாப்பிட்டுட்டு வெள்ளவத்தை  நோக்கி பயணித்தோம்.

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் எனும் ஓர் அமைப்பு அங்கு உள்ளது. சுமார் 5  வருடங்களுக்கு முன்னர் நான் seminar ஒன்றுக்காக அங்கு சென்ற ஞாபகம் உள்ளது. எனவே அங்கு போய் தகவல்கள் சிலவற்றை திரட்டலாம் என தீர்மானித்தோம். ஆனால் அங்கும் இடத்தை தேடி அலைய வேண்டியிருந்தது. ஒருமாதிரியாக மாலை 3 மணியளவில் அந்த நிறுவனத்தை சென்றடைந்தோம். அங்கு பணியாற்றும் அனைவருமே பெண்கள் தான். அதன்  இயக்குனரை சந்திக்க வேண்டும் எனக்கூறி உள்ளே நுழைந்தோம். Appointment இருக்கா என Reception இல் வினவினர். இல்லை என்றோம். இருந்தும் சில நிமிடங்களில் அதன் இயக்குனரை சந்திக்க முடிந்தது. அவர் வந்ததற்கான நோக்கத்தை வினவினார். எங்களை அறிமுகப்படுத்தி விட்டு ' இலங்கையிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் தொடர்பாகவும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாகவும் ஆய்வொன்றை மேற்கொள்கின்றோம். அதற்காக சில தகவல்களை திரட்டவே இங்கு வந்தோம்'  என பதிலளித்தேன். உடனே அவர் அங்கு பணி புரியும் பெண்ணொருவரை அழைத்து இவங்க கேட்குற தகவல்களை வழங்குமாறு பணித்தார். அவரும் எங்களை அழைத்துச் சென்று  நூலகத்தில் கொஞ்ச நேரம் இருங்க வருகிறேன் என்று விட்டுப் போனார்.

நாங்கள் அங்கிருந்த புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தோம். சுமார் 10  நிமிடங்களில் அவர் திரும்பி வந்தார். கைகளில் புத்தகங்கள், Files, hand outs என்பன இருந்தன. எங்களை உட்கார சொல்லிவிட்டு அவரும் உட்கார்ந்தார். அந்த நிறுவனத்தின் ஆரம்பம் முதல் அதன் செயற்பாடுகள், நடவடிக்கைகளை அவர் விளக்கிக்கொண்டிருந்தார். இறுதியில் ஒரு மணிநேர லெக்சரே நடத்தி விட்டார். ஏன்டா வந்தோம் என்றிருந்தது. இடைக்கிடையே நான் காசியின் முகத்தையும் அவன் எனது முகத்தையும் பார்த்துக்கொண்டோம். நேரம் 4 மணி கடந்து கொண்டிருந்தது. சில புத்தகங்கள், நிறைய கையேடுகளை அவர் எங்களுக்கு வழங்கினார். மேலும் ஏனைய பெண்கள் அமைப்புக்கள் தொடர்பிலும் எங்களுக்கு தகவல் தந்தார். அன்று அவர் எங்களுக்கு செய்தது மிகப் பெரிய உதவி. எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நன்றிகளை கூறிவிட்டு அங்கிருந்து  வெளியேறினோம்.

நேரம் 4.15 ஆகியிருந்தது. இப்பொழுது எங்களுக்கு மனக்கண்ணில் மணி சேரின் முகம் மறைந்து பிரசாத் சேரின் முகம் நிலைத்து நின்றது. 'பிரசாத் சேர்' எமது கல்லூரியின் தொழிநுட்ப பிரிவுக்கு பொறுப்பானவர். வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். நாங்கள் எடுத்து வந்திருந்த Recorder  உள்ளிட்ட உபகரணங்களை மாலை 4.30 க்குள் ஒப்படைக்க வேண்டும். இது தான் இப்போது எங்களுக்கு இருக்கின்ற பிரச்சனை. தவறினால் அவ்வளவு தான். இருந்து முடிஞ்சு. மிக அவசரமாக ஓடோடி வந்து 141  ம் இலக்க நாரஹேன்பிடி பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.எனக்கு பதட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால் காசி ரொம்ப கூலாக இருந்தான். "அதெல்லாம் பிரச்சனையில்ல மச்சான்" என்று தனது பாணியில் என்னை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

இந்த இடத்தில் காசியைப் பற்றி சொல்ல வேண்டும். அவன் என்ன தான் பெரிய மலை பிளக்குற விஷயம் என்றாலும் அதை simple ஆகவே எடுத்துக்கொள்வான். எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டான். ஒருமாதிரியா college ஐ வந்தடைய 4.50 ஆக இருந்தது. ஓடோடிச் சென்று Recorder  ஐ return பண்ணின பிறகு தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்தது போன்றிருந்தது. 

No comments:

Post a Comment