Wednesday, 7 September 2011


கொழும்பு மாநகர சபை: ஆட்சி யார் வசம்?
                                                     
ஒக்டோபர் 08 2011. இந்த ஆண்டின் மூன்றாவது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தினம். இம்முறை 23 சபைகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இவ் 23 சபைகளில் கொழும்பு மாநகர சபையே பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதுதவிர கண்டி, காலி, மாத்தறை, நீர்கொழும்பு, அனுராதபுரம், கம்பஹா, இரத்தினபுரி, கல்முனை, குருநாகல், மாத்தளை என பிரதானமான சபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.

கொழும்பு மாநகரசபைக்கு மும்முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம். முஸம்மிலும், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் முன்னாள் பா.உ மனோ கணேசனும் மேயர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். விக்ரமபாகு கருணாரத்னவின் புதிய சமசமாஜக் கட்சி இம்முறை கொழும்பு மாநகர சபை உட்பட தெஹிவளை- கல்கிஸ்ஸை, மொரட்டுவை ஆகிய மாநகர சபைகளுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றமை விசேட அம்சமாகும்.
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. வரும் 12 ம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18 வது கூட்டத்தொடரை சந்திக்க இலங்கை தயாராகி வருகின்றது. இதே வேளை மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் நாட்டில் அதிகரித்துச் செல்கின்றது. இவைகளின் காரணமாக நாட்டு மக்கள் அரசின் மீது அதிருப்தியடைந்திருக்கும் நிலையிலேயே அரசாங்கம் இம்முறை தேர்தலை எதிர்கொள்கின்றது

                                                 

மறுபக்கம் உட்கட்சிப்பூசல்கள், தலைமைத்துவப் பிரச்சனைகள் போன்றவற்றினால் ரணில் - சஜித் என இரு பிரிவுகளாக ஐ.தே.க பிளவடைந்து பலம் குன்றிய ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இம்முறை தேர்தலை அது சந்திக்கின்றது

 
                                                                      


இதேவேளை, அண்மைக்காலமாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பின்னடவை சந்தித்து வருகின்ற மக்கள் விடுதலை முன்னணி இந்த தேர்தலிலாவது மக்களின் மனங்களில் இடம்பிடித்து இருக்கும் தமது ஆசனங்களையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் களமிறங்கியுள்ளது.
                                                                 
  கொழும்பிலுள்ள தமிழ் மக்களின் ஆதரவினைப் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் தேர்தலை சந்திக்கின்ற ஜ..மு இம்முறை புதிய சமசமாஜக் கட்சியுடன் கைகோர்த்துள்ளமையானது சிங்கள மக்களின் வாக்குகளையும் பெறும் என்ற எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
கடந்த காலங்களில் கொழும்பு மாநகர சபையினைப் பொறுத்தவரையில் ஐ.தே.க வின் ஆதிக்கமே அதிகரித்துக் காணப்பட்டுள்ளது. எனினும் கடந்த தடவை முகவரியற்ற ஒரு சில அரசியல் குழுக்களின் வசம் இருந்த கொழும்பு மாநகர சபை எவ்வித முன்னேற்றத்தினையும் ஏற்படுத்தியதாக வரலாறுகள் இல்லை. இந்நிலையில் அடுத்து கொழும்பை ஆளப்போவது யார் என்ற கேள்வி இப்பொழுது எழுகின்றது.
அரசாங்கம் இம்முறை கொழும்பைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தமது தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் மிலிந்த மொரகொட ஓர் ஆளுமையுள்ள தலைவராக செயற்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் மக்கள் மத்தியில் திருப்திகரமானதாக அமையவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகின்றது. யுத்த வெற்றியையும் அபிவிருத்திப் பணிகளையும் மட்டுமே அரசாங்கம் தேர்தல் மூலதனமாக பயன்படுத்துகின்றது. கொழும்பிலுள்ள மக்களில் பலர் வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்ந்து வருகின்றனர். மக்களின் வாழ்க்கைச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் சேரிப் புறங்களில் வாழ்ந்து வருகின்ற கணிசமான மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை, சகல துறைகளுக்கும் கணிசமான தொகை வரி விதிக்கப்படுதல் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை பொதுமக்கள் அரசு மீது சுமத்துகின்றனர். இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு அரசு எவ்வாறான தீர்வினை வழங்கப் போகின்றது என்பதிலேயே கொழும்பு மாநகர சபையில் அரசாங்கத்தின் வெற்றி தங்கியிருக்கின்றது.
                                                        

இதேவேளை கொழும்பில் கணிசமான வாக்கு வங்கியினைக் கொண்டிருக்கின்ற ஐ.தே.க இம்முறை கொழும்பைக் கைப்பற்றுமா என்ற கேள்வி நிலவுகின்ற வேளையில் அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைகள் அதன் வெற்றியில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகின்றது. .தே.க வின் மேயர் வேட்பாளருக்கு முன்னாள் எம்.பி.மஹ்ரூப், மேல் மாகான சபை உறுப்பினர்களான ராம், முசம்மில் மற்றும் சஜித் பிரேமதாச தரப்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் போன்றோர்களினது பெயர்கள் பிரேரிக்கப்பட்ட வேளையில் இறுதியாக முஸம்மிலின் பெயரே பரிந்துரைக்கப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த மஹ்ரூப் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துள்ளார். இதனால் ஐ.தே.க வின் வாக்கு வங்கியில் சில சறுக்கல்கள் ஏற்படலாம் என கருதப்படுகின்றது
                                                                                     

இது இவ்வாறிருக்க, கடந்த 2010 பொதுத்தேர்தல் வரையும் ஐ.தே.க வின் பலம் வாய்ந்த ஒரு பங்காளியாக இருந்த மனோ கணேசனின் தனித்து இயங்கும் தீர்மானமும் ஐ.தே.க வை மேலும் குழிக்குள் தள்ளியுள்ளது. அதேபோன்றே ஐ.தே.க வின் மற்றுமொரு பங்காளியாக இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்பொழுது ஐ.தே.க வுடன் இல்லாதிருப்பது அதன் வளர்ச்சிப்படிகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களாகும். அண்மைக்காலமாக சிறுபான்மையின மக்களிலேயே தங்கியிருக்கும் ஐ.தே.க இம்முறை எவ்வாறு வெற்றிப்பாதையில் செல்லும் என்ற கேள்வி பரவலாக எழுகின்றது.
                                                                            

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை மூலதனமாக பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டு வரும் ஜே.வி.பி கடந்த பொதுத்தேர்தல் தொடக்கம் பாரிய பின்னடைவையே சந்தித்து வருகின்றது. இம்முறை கொழும்பு மாநகர சபையில் தமது ஆசனங்களை தக்க வைக்கும் நோக்குடன் அனோமா பொன்சேகாவை மேயர் வேட்பாளராக களமிறக்க முயன்றது. எனினும் அவர் அதற்கு இணங்காததன் காரணமாக தமது முயற்சியினைக் கைவிட்டது. எனவே ஜே.வி.பி இம்முறை என்ன செய்யப்போகின்றது? என அவதானிகள் எதிர்பார்க்கின்றனர். எனினும் அரசு மற்றும் ஐ.தே.க சார்பில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் அவர்களை விட ஜே.வி.பி வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஜே.வி.பி யின் பா.. அநுர குமார திசாநாயக கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
                                                      

இதேவேளை ஐ.தே.க வால் புறக்கணிக்கப்பட்டு தனது சகோதரரிடம் நன்கு பாடம் கற்றுக்கொண்ட மனோ கணேசன் தனது ஜ..முன்னணியை இம்முறை களமிறக்கியுள்ளதுடன் கொழும்பு மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராகவும் குதித்துள்ளார். இவருடன் விக்ரமபாகு கருணாரத்ன இணைந்துள்ளமையானது ஒரு கூடுதல் பலத்தை இவருக்கு ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் ஜ..முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை கூட ஜ..முன்னணிக்கு கிடைத்த தனி ஒரு அங்கீகாரமாகும்.
அதுதவிர, முஸ்லிம் மக்களின் கணிசமான ஆதரவுடைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை கொழும்பில் தனித்துக் களமிறங்கியுள்ளது. எனினும் அது அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்னர் தனது வாக்கு வங்கியில் ஒரு சரிவையே சந்தித்து வருகின்றது. எனவே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு முஸ்லிம்களை ஈர்க்குமா என்பதும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயமாகும்.

எனவே மூவின மக்களையும் கிட்டத்தட்ட சமவளவில் உள்ளடக்கிய கொழும்பில், கொழும்பு மாநகர சபையை வரும் 08 ம் திகதி யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பே எம்மத்தியில் உள்ளது.

No comments:

Post a Comment